சீனாவில் தானியங்கி முறையில் இயங்கும் (Driverless) டெலிவரி வாகனங்கள், சாலைத் தடைகளையும் மனிதர்களின் எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல் “நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்” என்பது போல அடம்பிடித்துச் செல்லும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் மீம்ஸ்களாகத் தெறிக்கின்றன. ​சீனாவின் விநியோகக் கட்டமைப்பு (Logistics) மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ZTO Express மற்றும் J&T Express போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான டிரைவர் இல்லாத வாகனங்களைச் சாலைகளில் இறக்கியுள்ளன.

ஆனால், இந்த வாகனங்கள் புது சிமெண்ட் சாலை என்று பார்க்காமல் உள்ளே புகுந்து செல்வதும், வழியில் ஒரு மோட்டார் சைக்கிள் சிக்கியிருந்தாலும் அதை இழுத்துக்கொண்டே நகர்வதும், சாலைப் பணிகளில் ஈடுபடுபவர்கள் கத்தியும் நிற்காமல் செல்வதும் எனப் பெரும் ரகளையைச் செய்து வருகின்றன. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வரைபடம் (Mapped routes) மற்றும் சென்சார்களை நம்பி இவை இயங்குவதால், எதிர்பாராத சூழல்களைச் சமாளிக்க முடியாமல் ‘ரோபோ’ போல விடாப்பிடியாகச் செல்வதே இந்த காமெடிகளுக்குக் காரணம்.