தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் கிடுகிடுவென மாறி வரும் நிலையில், டிடிவி தினகரன் கொடுத்துள்ள பேட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகள் ஓரளவுக்கு இறுதியாகிவிட்டன. எனினும், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) ஆகியோர் தங்களது இறுதி முடிவை இன்னும் அறிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) மீண்டும் இணைந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் குறித்து முக்கியமான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
“ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் என விரும்புவோர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில், ஓபிஎஸ் அவர்கள் நிச்சயமாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது ஒற்றை இலக்கு என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
