அதிமுக முன்னாள் அமைச்சரான வெல்லமண்டி நடராஜன், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்த இவர், 2016 சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சுற்றுலாத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியில் இருந்து பலர் விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு அதிருப்தி தெரிவித்து எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சட்டசபையில் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்திருந்தனர்.

இதனால் தவெக அமைச்சரவையில் தங்களுக்குப் பதவி கிடைக்கும் என எஸ்பி வேலுமணி தரப்பு எதிர்பார்த்த நிலையில், விஜய் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்காததால் அவர்கள் மீண்டும் எடப்பாடி பக்கம் தாவத் தொடங்கினர்; இருப்பினும் எஸ்பி வேலுமணி தரப்பில் இருந்து இசக்கி சுப்பையா உட்பட 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது எடப்பாடி தரப்புக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்தான், தற்போது வெல்லமண்டி நடராஜனும் தவெகவில் இணைந்துள்ளார். சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த இவர், கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விரும்பாமல் ஓ. பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார்.

பின்னர் 2026 சட்டசபை தேர்தலின் போது ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்ததால், வெல்லமண்டி நடராஜன் மீண்டும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவிற்கே திரும்பினார்.

இந்நிலையில், தற்போது அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், வெல்லமண்டி நடராஜனும் அதிமுகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இன்று விஜய்யின் தவெகவில் தடம் பதித்துள்ளார்.