அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் வளர்ந்து வரும் கட்சியான நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கும் என நிர்வாகிகள் கூறியதோடு, பாமக கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் அரக்கோணம் உள்ளிட்ட வட மாவட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும் எனவும் தலைமையிடம் ‌ கூறியுள்ளனர்.

அதன்பிறகு ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர்களின் ஆதரவாளர்களை அதிமுகவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என சில நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவர் சசிகலா, ஓபிஎஸ், வைத்திலிங்கம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு எந்த காலத்திலும் அதிமுக கட்சியில் இடம் கிடையாது என கூறியுள்ளார்.