பாலக்காடு மாவட்டம் ஷர்னூரை சேர்ந்த சவுமியா (வயது 23) கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இரவு எர்ணாகுளத்திலிருந்து ஷர்னூருக்குச் செல்லும் பயணிகள் ரெயிலில் தனியாக பயணித்தார். அதே பெட்டியில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த சார்லி தாமஸ் எனும் கோவிந்தசாமி (வயது 30) ஏறியபோது, தனியாக இருந்த சவுமியாவை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தான். உயிர்விட முயன்ற சவுமியா ரெயிலில் இருந்து குதித்தார். ஆனால், தண்டவாளத்தில்  கிடந்த அவரை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த கோவிந்தசாமி, பின்னர் கைது செய்யப்பட்டார்.

சவுமியாவை பலத்த காயங்களுடன் பாதுகாப்புப் படையினர் மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 6ம் தேதி உயிரிழந்தார். இது கேரளா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. கோவிந்தசாமிக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அவரை கன்னூர் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கோவிந்தசாமி சிறையிலிருந்து தப்பியதை அதிகாரிகள் கண்டறிந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் கடும் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள், பொதுமக்கள் தகவல்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மூன்றரை மணி நேர தேடுதலுக்குப் பிறகு, தலப்பு பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்திலுள்ள கிணற்றுக்குள் பதுங்கியிருந்த கோவிந்தசாமி கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் கன்னூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த, பொதுமக்கள் உதவியைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளன கன்னூர் போலீஸ் அதிகாரிகள்.