2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் டி20 வடிவில் நடைபெறும் என்றும், இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் மட்டுமே இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 28 போட்டிகள் நடைபெறவுள்ளன. இது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் அணிகளைத் தேர்வு செய்வதில் ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. இதில், ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் சிறந்த ஒரு அணிக்கு மட்டுமே தகுதி வழங்கப்படும். இதன்படி, ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கும், ஐரோப்பாவிலிருந்து இங்கிலாந்துக்கும், ஓசியானியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கும், ஆப்பிரிக்காவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கும், அமெரிக்க கண்டத்திலிருந்து மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் அமெரிக்கா அணிக்குத் தகுதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளுக்கு ஒலிம்பிக் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக உள்ளது.
ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 29ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நேரப்படி முதல் போட்டி காலை 9:00 மணிக்கும் (இந்தியா நேரப்படி இரவு 9:30), இரண்டாவது போட்டி மாலை 6:30 மணிக்கும் (இந்தியா நேரப்படி மறுநாள் காலை 7:00) தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
