வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், உலக நாடுகள் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழலை உற்று நோக்கிய தருணத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவிற்குள் தனது ரகசிய ஒற்றர்களை ஊடுருவச் செய்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஒற்றர்கள் நேரடியாகத் தாக்குதல் நடத்தாமல், போலி அடையாளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ‘ரிமோட்’ ஐடி பணியாளர்களாகச் சேர்ந்துள்ளனர்.

மேலும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த ஊடுருவல், அந்நாட்டின் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அமெரிக்க நிறுவனங்களுக்குள் நுழைந்த வடகொரிய உளவாளிகள், மிக முக்கியமான ராணுவ ரகசியங்கள், ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் மற்றும் அணுசக்தி தொடர்பான தரவுகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சதித் திட்டத்தின் மூலம் சுமார் 6.8 மில்லியன் டாலர் வரையிலான தொகையைச் சம்பளமாகவும், கிரிப்டோகரன்சி திருட்டு மூலமாகவும் வடகொரியாவிற்கு அனுப்பியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிதி மற்றும் திருடப்பட்ட தொழில்நுட்பத் தகவல்கள் வடகொரியாவின் தடைசெய்யப்பட்ட அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.