மத்திய கிழக்கில் நிலவி வரும் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தைத் தணிக்க எகிப்து நாடு தற்போது ஒரு முக்கிய அமைதித் தூதராகக் களம் இறங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தால் உலகளாவிய எரிசக்தி மற்றும் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், கத்தார் மற்றும் துருக்கி போன்ற நாடுகளுடன் இணைந்து எகிப்து இந்த சமரசப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே பல உலகளாவிய போர்களைத் தடுத்து நிறுத்திய அனுபவம் கொண்ட எகிப்து மீது ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே நம்பிக்கை வைத்துள்ளன.
இருப்பினும், இந்த போர் நிறுத்தத்திற்கு ஈரான் சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரான் மீது தாக்குதல் நடத்தாது என்பதற்கான உறுதியான உத்தரவாதத்தையும், கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட இழப்புகளுக்கான இழப்பீட்டையும் ஈரான் கோரியுள்ளது.
மேலும் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருந்தாலும், ஈரானின் இந்த நிபந்தனைகளால் ஒப்பந்தம் எட்டப்படுவதில் இழுபறி நீடிக்கிறது. எகிப்தின் இந்தத் தலையீடு மத்திய கிழக்கில் மீண்டும் அமைதியைக் கொண்டுவருமா என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
