ஆந்திர மாநிலம் கர்னூலில் பள்ளி மாணவன் ஒருவன் நூலிழையில் உயிர் தப்பிய நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி (CCTV) வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை உரைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்த மாணவன் ஒருவன் வழக்கம்போல சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறான். அவன் நடந்து சென்ற அடுத்த சில நொடிகளிலேயே, அங்கிருந்த ஒரு பழைய மின் கம்பம் திடீரென வேரோடு சரிந்து நடுரோட்டில் பயங்கர சத்தத்துடன் விழுகிறது.

நல்ல வேளையாக, அந்த மின் கம்பம் விழுவதற்குக் சில நொடிகள் முன்பாகவே அந்த மாணவன் அந்த இடத்தை விட்டுத் தாண்டிச் சென்றதால், அவனது உயிர் அதிர்ஷ்டவசமாகப் பிழைத்தது. சற்றே தாமதித்திருந்தாலும் அந்தப் பையனுக்குப் பெரிய ஆபத்து நேர்ந்திருக்கும் என்பதால், இக்காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் “தம்பி உனக்கு ஆயுசு நூறு” எனப் பதிவிட்டு வருகின்றனர்.

​இதேவேளையில், இந்த விபரீத சம்பவத்திற்குப் பின்னால் இருக்கும் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அந்த மின் கம்பம் மிகவும் பழுதடைந்து, எந்த நேரத்திலும் விழும் ஆபத்தான நிலையில் இருந்தது குறித்தும், அதனை உடனடியாக மாற்றக் கோரியும் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இருப்பினும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்றும், ஒரு உயிர் போகும் வரை அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்களா என்றும் மக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.