இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள சிம்சா கிராமத்தில் அமைந்துள்ள ‘சிம்சா மாதா’ கோவில், குழந்தை வரம் தரும் ஒரு அதிசயமாகப் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள ஒரு விசித்திரமான நம்பிக்கையின்படி, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் நவராத்திரி காலங்களில் கோவிலின் தரையில் படுத்து உறங்கினால், அன்னை சிம்சா தேவி அவர்களின் கனவில் தோன்றி குழந்தை வரம் அருள்வதாகக் கூறப்படுகிறது.
மேலும் குழந்தை வரம் அளிப்பவர் என்று அழைக்கப்படும் இந்த அன்னையைத் தரிசிக்க பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கு வருகை தருகின்றனர். இந்த ஆலயத்தின் மற்றுமொரு வியப்பிற்குரிய அம்சம் என்னவென்றால், பெண்களின் கனவில் தேவி தோன்றி அவர்கள் பெறப்போகும் குழந்தையைப் பற்றிய குறிப்புகளை வழங்குவதாக நம்பப்படுகிறது.
இதனால் கனவில் ஒரு பெண்ணுக்குப் பழங்கள் கிடைத்தால் அவர் கருவுறுவார் என்றும், அதுவே கல் அல்லது கட்டை கிடைத்தால் அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், கொய்யாப்பழம் கனவில் வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், வெண்டைக்காய் வந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும் அங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. அறிவியலுக்கு அப்பாற்பட்ட இந்த ஆன்மீக நம்பிக்கை, இன்றும் பல குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.
