ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கா தனது பிடியை இறுக்கி வரும் நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டால், எந்த நேரத்திலும் அந்தத் தீவை அமெரிக்கப் படைகளால் ‘அழிக்கவோ’ அல்லது ‘கைப்பற்றவோ’ முடியும் என வெள்ளை மாளிகையின் முதன்மைத் துணைப் பத்திரிகைச் செயலாளர் அன்னா கெல்லி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைச் சீர்செய்ய இந்தக் கடுமையான நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கார்க் தீவில் இருந்த அனைத்து ராணுவ இலக்குகளையும் அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ள டிரம்ப், “குழாய்களைத் தவிர மற்ற அனைத்தும் சிதைக்கப்பட்டுவிட்டன” என அத்தீவின் தற்போதைய நிலையை விவரித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களை ஈரான் தடுத்து வருவதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனை எதிர்கொள்ள அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதிக்குக் கூடுதல் கடற்படை வீரர்களை அனுப்பி வருவதாகவும், இது ஒரு தரைவழித் தாக்குதலுக்கான (Ground Operation) அறிகுறி என்றும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் 40-க்கும் மேற்பட்ட கண்ணிவெடி பதிக்கும் கப்பல்களை ஏற்கனவே அமெரிக்கா அழித்துள்ள நிலையில், ஈரான் தொடர்ந்து அடம் பிடித்தால் கார்க் தீவின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் தரைமட்டமாக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் இந்தத் தீவு தற்போது “பாதுகாப்பற்ற ஒரு சிறிய நிலப்பரப்பாக” மாறியுள்ளதாக அமெரிக்கா கருதுவது, போரின் அடுத்தகட்ட தீவிரத்தைக் காட்டுகிறது.
