ஈரான் உடனான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம், ஆனால் இப்போதைக்கு போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எதிரியை முற்றிலுமாக அழிக்கும் வரை தாக்குதல்கள் தொடரும் எனக் குறிப்பிட்ட அவர், ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா ஏற்கனவே நிர்மூலமாக்கிவிட்டதாகவும், ராணுவ ரீதியாக ஈரான் தற்போது செயலிழந்துவிட்டதாகவும் கூறினார். ஈரானிய ஆட்சியை “மிருகங்கள்” எனச் சாடிய டிரம்ப், அவர்களின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறனை வேரோடு அழிப்பதே தங்களின் இறுதி இலக்கு என முழங்கியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் நேட்டோ நாடுகள், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் மௌனம் காப்பது குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய டிரம்ப், அந்தப் பாதையைப் பயன்படுத்தும் நாடுகளே அதன் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு ஹார்முஸ் ஜலசந்தி தேவையில்லை என்றாலும், ஈரானிய அச்சுறுத்தல் நீக்கப்பட்ட பிறகு மற்ற நாடுகளின் பாதுகாப்பு முயற்சிகளுக்குத் துணையாக இருப்போம் என்றும் அவர் கூறினார். இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே தங்களின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்ட டிரம்ப், இலக்கை அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார். டிரம்பின் இந்த ஆவேசமான முடிவு, மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகளைத் தற்போதைக்கு முடக்கியுள்ளது.
