ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் உள்ளிட்ட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஒரே நேரத்தில் இத்தனை தலைவர்களை வீழ்த்திய இந்த வெற்றியை யாராலும் நம்ப முடியாது” என்று குறிப்பிட்ட டிரம்ப், தாக்குதல்கள் மிக வேகமாகத் தொடர்வதாகவும் கூறியுள்ளார்.

ஈரானிய அரசு ஊடகங்களும் தங்களது தலைவர்களின் மரணத்தை உறுதி செய்துள்ளதால், மத்திய கிழக்குப் பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்தத் தாக்குதலின் ஒரு பகுதியாக, ஈரானின் மிக நவீனமான ‘ஜமரன்’  ரக போர்க்கப்பலைத் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நிலப்பரப்பில் உள்ள முக்கியத் தலைவர்களைக் குறிவைத்த அதே நேரத்தில், ஈரானின் கடல்வழிப் பாதுகாப்பையும் சிதைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் ஒரே அடியில் வீழ்த்தப்பட்டுள்ளதால், அந்த நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.