மகாராஷ்டிரா மாநிலம் வசாய் பகுதியில் உள்ள காளம் பகுதியில் அமைந்துள்ள துளசி ரிசார்ட்டில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு நேரத்தில் நடந்த ஒரு பார்ட்டியின் போது அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிவ் எம்.ஐ.டி.சி பகுதியில் தொழிலதிபர் ஒருவர் சுடப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது மற்றொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிகவண்டி பகுதியிலிருந்து சுற்றுலா வந்த நண்பர்கள் குழு ஒன்று இந்த ரிசார்ட்டில் தங்கி நள்ளிரவில் மது அருந்திவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுட்டிருந்தபோது, உற்சாக மிகுதியில் சண்டேஷ் குடாவ் என்ற 32 வயது நபர் தன்னிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு உடனடியாக ரிசார்ட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.

ஆரம்பத்தில் அங்கு எந்தச் சம்பவமும் நடக்கவில்லை எனப் பொய் கூறப்பட்டாலும், போலீசார் நடத்திய தீவிரத் தேடுதலில் காலியான தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டு துப்பாக்கிச் சூடு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்த ஆயுதம் எங்கு வாங்கியது என்பது குறித்தும், அவரது கடந்தகால கிரிமினல் பின்னணிகள் குறித்தும் அர்நாலா கடலோர காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.