உத்தரப்பிரதேச மாநில காஜியாபாதில், காவல் ஆணையரிடம் கொடுத்த புகார் மனு ஓன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோனி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மனைவியின் இன்ஸ்டாகிராம் பழக்கம் காரணமாக வாழ்க்கை துன்பமாக மாறிவிட்டதாகக் கூறி, காவல்துறையிடம் கண்ணீர் மல்க உயிர் காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2009-இல் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு 9 மற்றும் 6 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், 2024-ம் ஆண்டிலிருந்து மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதில் தீவிர ஆர்வம் அதிகரித்ததாகவும், அதன்பிறகு குடும்பத்தில் அமைதி கலைந்துவிட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
கணவரின் குற்றச்சாட்டின்படி, அவரது மனைவி அடிக்கடி அசிங்கமான வீடியோக்கள் எடுத்து பதிவேற்றுவதாகவும், தடுத்தால் கடும் சண்டை போடுவதோடு, பெட்ரோல் ஊற்றி தன்னை எரித்துக்கொள்ள முயன்றதும், தற்கொலை செய்ய முயன்றதும் வீடியோவில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, அவர் மீது கத்தியை எடுத்துக்கொண்டு விரட்டிய வீடியோவும் காவல் ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. “பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், தன்னை அழித்துக்கொள்வதற்கும் தயங்கவில்லை. என்னை உயிருடன் விட மாட்டேன் என அடிக்கடி மிரட்டுகிறாள்” என்று புகாரளித்துள்ளார்.
மேலும், கணவர் கூறுகையில், மனைவி ரீல் எடுக்கும் போதெல்லாம் பிற ஆண்களுடன் நெருங்கிப் பழகி, அசிங்கமான செயல்களில் ஈடுபடுகிறார். இதை எதிர்த்தால், மனைவி மட்டுமல்லாமல், அவரது நண்பர்களும் “உன்னை கொன்றுவிடுவோம்” என மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது இந்த அதிர்ச்சி புகாரை அடிப்படையாகக் கொண்டு, காஜியாபாத் காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர். சமூக வலைதள புகழுக்காக உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
