ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ரவீந்தர் என்ற இந்திய இளைஞர், அங்கிருக்கும் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஆஸ்திரேலியாவில் காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை உழைத்தால், ஒரே நாளில் சுமார் 650 முதல் 700 டாலர்கள் வரை சம்பாதிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய ரூபாய் மதிப்பில் இது கிட்டத்தட்ட 35 முதல் 40 ஆயிரம் ரூபாயாகும். இது இந்தியாவில் ஒரு நபர் ஒரு மாதத்திற்கு வாங்கும் சம்பளத்திற்கு இணையானது என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நேரம் வேலை செய்தாலும், குடும்பத்துடன் நேரம் செலவிட முடிவதால் தனக்கு சோர்வு தெரியவில்லை என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், வெளிநாடுகளில் செலவுகள் அதிகமாக இருக்குமே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தனது ஒரு நாள் வருமானத்தைக் கொண்டே ஒரு முழு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிவிட முடியும் என்று எதார்த்தமாகப் பேசியுள்ளார். வாய்ப்பு கிடைத்தால் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என்றும் அவர் ஊக்கப்படுத்தியுள்ளார்.

அதே வேளையில், தான் இன்று அதிகம் சம்பாதித்தாலும், தனது பெற்றோரின் கடின உழைப்பிற்கும் தியாகத்திற்கும் ஈடாக முடியாது என்று நெகிழ்ச்சியுடனும் கூறியுள்ளார்.

இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும், அதே சமயம் வெளிநாடுகளில் இருக்கும் வரி மற்றும் அதிகப்படியான வேலைப்பளு குறித்த விவாதங்களும் எழுந்து வருகின்றன.