இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள நெதிவோட் நகரில், திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டமாகப் படையெடுத்து வந்து மக்கள் மற்றும் வாகனங்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சாலையில் செல்லும் மக்கள் தலைதெறிக்க ஓடுவதையும், வானமே தேனீக்களால் மறைக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுவதையும் காண முடிகிறது.
இந்தத் திடீர் தாக்குதலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், சில இடங்களில் விமானப் போக்குவரத்து சேவைகளிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேலிய நிர்வாகம் சிறப்புப் படைகளை அனுப்பி தேனீக்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை வெறும் இயற்கையான நிகழ்வாக மட்டும் பார்க்காமல், சமூக வலைதளங்களில் இது ஒரு ‘அழிவுக்கான அறிகுறி’ எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, விவிலியம் (Bible) மற்றும் குர்ஆன் போன்ற புனித நூல்களில் சொல்லப்பட்டுள்ள சில தீர்க்கதரிசனங்களுடன் இதனை ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். விவிலியத்தின் ஒரு பகுதியிலும், குர்ஆனின் சூரா அல்-ஆராஃப் பகுதியிலும் பூச்சிகள் மற்றும் வெட்டுக்கிளிகளின் வருகை எச்சரிக்கைக்கான அடையாளமாகச் சொல்லப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி இஸ்ரேலுக்கு ஏதோ ஆபத்து வரப்போவதாகக் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கான காகங்கள் சூழ்ந்ததும் விவாதப் பொருளாக மாறியிருந்தது. இருப்பினும், இது பருவநிலை மாற்றம் அல்லது உணவு தேடி வரும் பூச்சிகளின் இயல்பான இடப்பெயர்வுதான் என்றும், இதற்கும் மதக் கணிப்புகளுக்கும் எந்த அறிவியல் ரீதியான தொடர்பும் இல்லை என்றும் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
