பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் முதல் மூன்று மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது, அவர்களின் மரபணுக்களில் (DNA) நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என புதிய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, சுமார் 3,421 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் இந்த வியக்கத்தக்க தகவல் வெளியாகியுள்ளது.
தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வளர்ச்சி தொடர்பான மரபணுக்களில் ‘எபிஜெனெடிக்’ (Epigenetic) எனப்படும் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுவதை ரத்த மாதிரிகள் மூலம் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக, மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தாய்ப்பால் மட்டுமே குடித்த குழந்தைகளுக்கு, ‘டிஎன்ஏ மெத்திலேஷன்’ (DNA Methylation) என்ற செயல்முறை மூலம் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் குழந்தைகளின் 5 முதல் 12 வயது வரையிலான காலக்கட்டத்திலும் ரத்தத்தில் தென்படுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும், பிற்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பதை இந்த ஆய்வு மீண்டும் நிரூபித்துள்ளது. இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை மீண்டும் உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.
