அமெரிக்காவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண் மீனு பாத்ரா (53), அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் (ICE) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் இவர், அங்குள்ள நீதிமன்றங்களில் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் பணி நிமித்தமாக விமானத்தில் பயணம் செய்யவிருந்த போது, குடியுரிமை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
தன்னிடம் முறையான பணி அனுமதி (Work Permit) இருப்பதாக அவர் வாதிட்ட போதிலும், அதிகாரிகள் அவரைக் குற்றவாளியைப் போலக் கையாண்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு 24 மணி நேரமாக உணவோ அல்லது குடிநீரோ வழங்கப்படவில்லை என்றும், அவரது வழக்கமான மருந்துகள் கூட மறுக்கப்பட்டதாகவும் மீனு பாத்ரா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
1984 சீக்கிய கலவரத்தில் பெற்றோரை இழந்த இவர், 1991-ல் சிறுமியாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவரது மகன் தற்போது அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்தியாவிற்கு அனுப்பப்பட்டால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி கடந்த 2000-ம் ஆண்டே இவருக்குப் புகலிடம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இவரை வேறொரு நாட்டிற்கு (Third Country) நாடு கடத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
