கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் இன்று சென்னையில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பேருந்துகள் மூலம் சென்னைக்கு வரவழைத்து, அவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு அழைத்து வருதல் முதல், மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் த.வெ.க. ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, த.வெ.க. தலைவர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கவிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
அவர் கூறியதாவது: பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது விஜய்யின் தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி நாம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், அதைப் பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நான் அருவருப்பாக நினைக்கிறேன். அதைத் தாண்டி இங்கு அரசியல் இருக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து யாராவது இவ்வளவு நாளாக பேசிக் கொண்டிருந்தீர்களா? அது ஒரு அரசு படுகொலை. மக்களின் புரட்சியை சுட்டு ஒடுக்கினார்கள். அந்த சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்றதா? பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்ததா? குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு கொடுத்ததா?
ஆனால், ஒரு நடிகரைப் பார்க்கச் சென்ற கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இத்தனை லட்சம் ரூபாய் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனச் சொல்கிறார்கள். விவசாயி வீதியில் நெல் வீணாகிறது என்று கண்ணீர் சிந்தினாலும், யாரும் கவலைப்படவில்லை.
எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், கமல்ஹாசன், விஜய் — எல்லோரும் ரசிகர்களைச் சந்தித்தவர்கள். ஆனால் நான் எந்த ரசிகரையும் சந்தித்ததில்லை. நான் ஏசி அறையிலிருந்து வெளிவரவில்லை; சிறையிலிருந்து வெளிவந்தவன். எனது கட்சியில் ஒருவர் கூட ‘ரசிகர்’ என சேரவில்லை. இனச்சாவில் பிதுக்கி பிறந்த மகன் நான். மேலும் இதில் ஒப்பீடுகள் இருக்கக் கூடாது.” இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
