பெங்களூரு ஆடுகோடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் ஒருதலையாகக் காதலித்து வந்த வாலிபரை வசியம் செய்து தன்வசப்படுத்த முடிவு செய்தார். இதற்காக இன்ஸ்டாகிராமில் ‘மாந்திரீகம் மற்றும் குடும்பப் பிரச்சினை தீர்வு’ என வந்த விளம்பரத்தை நம்பி, அதில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய சந்திரசேகர் சுகத் குரு என்ற சாமியார், காதலனை வசியம் செய்யச் சக்திவாய்ந்த பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி, அந்த இளம்பெண்ணிடமிருந்து பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் பணத்தைப் பறித்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு சிறப்புப் பூஜைக்கு ரூ.4 லட்சம் கேட்டபோது அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து பணத்தைத் திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலி சாமியார், இளம்பெண்ணைத் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஆடுகோடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள போலி சாமியாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
