சிறுவயதில் நாம் அனைவரும் போர்டில் விளையாடிய ‘பாம்பு-ஏணி’ (Snakes and Ladders) விளையாட்டை, ஒரு நபர் உயிருள்ள விஷப்பாம்புகளுக்கு நடுவே விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஒரு சிறிய அறைக்குள் டஜன் கணக்கான பல்வேறு வகை பாம்புகளைத் தரையில் பரப்பிவிட்டு, அவற்றுக்கு இடையே மர ஏணிகளை அடுக்கி வைத்து இந்த விபரீத விளையாட்டை அவர் விளையாடுகிறார். 1 நிமிடம் 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவைப் பார்ப்பவர்களின் ரத்தம் ஒரு நிமிடம் உறைந்து போகிறது. அந்த நபர் தனது மொபைலில் ஆன்லைன் மூலம் டைஸ் (Dice) உருட்டுகிறார்; அதில் வரும் எண்களுக்கு ஏற்ப, சீறிக் கொண்டு இருக்கும் பாம்புகளின் உடல் மீது கால் வைத்து முன்னேறிச் செல்கிறார்.
பல பாம்புகள் அவரைத் தாக்க முயன்றாலும், அவர் எவ்வித அச்சமுமின்றித் தொடர்ந்து விளையாடுகிறார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரே நாளில் 68 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது சாகசம் கிடையாது, சுத்த முட்டாள்தனம்” என்றும், “6 விழுந்தால் அவருக்குப் பதவி உயர்வு இல்லை, நேராக எமனிடம் தான் செல்ல வேண்டும்” என்றும் கிண்டலாகவும் அச்சத்தோடும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
