மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கரில், ஒரு நாய் தன் தம்பியைத் தாக்கியபோது, பயமின்றிப் போராடி அவனைக் காப்பாற்றிய எட்டு வயது சிறுமியின் வீரம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் கிரிஷை ஒரு தெருநாய் திடீரெனத் தாக்கி, அவனது தலையைக் கடித்தது.
மேலும் தம்பி ரத்த வெள்ளத்தில் துடிப்பதைக் கண்ட 8 வயது அக்கா லீசா, சற்றும் பயப்படாமல் அந்த நாயுடன் மல்லுக்கட்டி, சுமார் 5 நிமிடங்கள் போராடி நாயை விரட்டினாள். சிறுமியின் இந்த சமயோசித புத்தி மற்றும் துணிச்சலான செயல் அந்தப் பகுதியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
நாயை விரட்டியதோடு நிறுத்தாமல், ரத்தம் வழிந்த தம்பியின் காயத்திற்குத் தனது டி-ஷர்ட்டைக் கிழித்துக் கட்டுப் போட்ட லீசாவின் செயல் அனைவரையும் வியக்க வைத்தது. பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி, ஆபத்தான நேரத்தில் காட்டிய மன உறுதி மற்றும் தன் தம்பி மீதான பாசம் ஒரு உண்மையான வீரக் கதையாகப் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் இந்தச் சிறுமியின் துணிச்சலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
