உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு ஒரு கணவன் நடத்திய நாடகம் போலீஸாரையே அதிர வைத்துள்ளது. மீரட்டைச் சேர்ந்த சாகிப் என்பவர், தனது மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் அறுத்துக் கொலை செய்துவிட்டு, எதுவுமே தெரியாதது போல ஊரே அதிரும் வகையில் அழுது நாடகமாடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஆய்வு செய்தபோது, அங்கு எந்தவிதமான போராட்டமோ அல்லது மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்ததற்கான அடையாளமோ இல்லை என்பதை கவனித்தனர். கொலையாளி நிச்சயம் வீட்டிற்கு நெருக்கமானவராகத்தான் இருக்க வேண்டும் என சந்தேகித்த போலீஸார், சாகிப்பின் ‘ஓவர் ஆக்டிங்’ நடிப்பைக் கண்டு அவர் மீது சந்தேகத்தை திருப்பினர்.

போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சாகிப் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும், அது மனைவிக்குத் தெரிந்ததால் ஏற்பட்ட தகராறில் அவரைக் கொன்றதும் அம்பலமானது. கள்ளக்காதலிக்காகக் கட்டிய மனைவியையே தீர்த்துக்கட்டிவிட்டு, போலீஸிடம் தப்பிக்க நாடகமாடிய அந்த நபரை போலீஸார் தற்போது கம்பி எண்ண வைத்துள்ளனர்.