கொல்கத்தாவின் முகுந்தபூர் பகுதியில் இயங்கி வரும் இந்த தேநீர் கடை, வெறும் ஒரு கப் தேநீரை 1000 ரூபாய்க்கு விற்றாலும், அதை ருசிப்பதற்காக மக்கள் அலைமோதி வருகின்றனர். பார்த்திப பிரதிம் கங்குலி என்பவரால் நடத்தப்படும் இந்த கடையில் விற்கப்படும் ‘போய்-பி-சா’ எனப்படும் இந்த ஸ்பெஷல் தேநீரின் ரகசியம் அதன் மூலப்பொருட்களில் உள்ளது.

மேலும் சாதாரண தேயிலைக்கு பதிலாக, கிலோ ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை விலை கொண்ட உயர்தரமான தேயிலை ரகங்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, இதில் சேர்க்கப்படும் வாசனை திரவியங்கள் மற்றும் அரிதான இயற்கை மூலிகைகள் இதற்கு ஒரு தனித்துவமான சுவையையும் மருத்துவ குணத்தையும் தருகின்றன.

இந்த ‘கோல்டன் டீ’ தயாரிப்பதற்கு சுமார் 30 நிமிடங்கள் வரை ஆகிறது. இதில் மஸ்கடெல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தேயிலை இலைகள் பயன்படுத்தப்படுவதால், இதன் சுவையும் மணமும் தேநீர் பிரியர்களை வெகுவாக ஈர்க்கிறது.

இதனால் வெறும் டீ குடிப்பதை விட, ஒரு புதுவிதமான அனுபவத்தைப் பெற விரும்புபவர்கள் இந்தக் கடைக்குத் தேடி வந்து வரிசையில் நிற்கின்றனர். விலையை விட தரத்திற்கும், அந்தத் தேநீரில் மறைந்துள்ள ரகசிய செய்முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதே இந்த கடையின் அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.