அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறியிருந்தார். ஆனால், இதனை ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) அதிரடியாக மறுத்துள்ளார். ஈரானின் யுரேனியம் எங்கும் மாற்றப்படாது என்றும், அமெரிக்காவின் அறிக்கைகள் முரண்பாடுகள் நிறைந்தவை என்றும் அவர் சாடியுள்ளார். சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் யுரேனியத்தை ஒப்படைப்பது பற்றியது அல்ல என்றும், மோதல்களைத் தீர்ப்பதை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

​ஈரானின் அணுசக்தித் திட்டம் அமைதி வழியிலானது என்றும், யுரேனியத்தைச் செறிவூட்டுவது தங்களது இறையாண்மை உரிமை என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது கடந்த காலங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், தற்போதைய சமாதானப் பேச்சுவார்த்தையில் யுரேனியத்தை வெளியேற்ற ஈரான் சம்மதிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. டிரம்பின் கூற்றை ஈரான் நேரடியாக மறுத்துள்ளது, சர்வதேச அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.