ஈரான் வசமிருந்த உலகின் மிக முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தி மீண்டும் வர்த்தகப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் மற்றும் அதன் தலைமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்திய பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துள்ள டிரம்ப், அந்நாட்டுப் பிரதமர் மற்றும் பீல்ட் மார்ஷலை ‘சிறந்த மனிதர்கள்’ என வர்ணித்துள்ளார்.
அதே சமயம், இக்கட்டான சூழலில் உதவ முன்வராத நேட்டோ அமைப்பை “பயனற்ற காகிதப் புலி” என டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். நேட்டோ அமைப்பினர் இப்போது உதவி கேட்கிறார்கள், ஆனால் தங்களுக்கு அவர்களின் உதவி தேவையில்லை என அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இந்த இக்கட்டான சூழலில் அளித்த துணிச்சலான உதவிக்கும் டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவியுடன் ஈரான் கடலில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்பட்ட செய்தி வெளியானவுடன் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகச் சரிந்துள்ளது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த போர்ப்பதற்றம் இந்த அறிவிப்பின் மூலம் தற்காலிகமாகத் தணிந்துள்ள நிலையில், லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒரு நிச்சயமற்ற நிலையிலேயே தொடர்ந்து வருகின்றன.
