டெல்லியில் கடந்த மே 20 மற்றும் 21 ஆம் தேதி இரவில், 38 வயதான ஷார்தா சாஹு மற்றும் அவரது 13 வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இந்த கொடூரச் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், அப்பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரரான 28 வயது சௌரப் சாஹு என்பவர் தான் இந்த இரட்டைக் கொலையைச் செய்த முக்கியக் குற்றவாளி என்பது தெரியவந்தது. சௌரப் சாஹுவுக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததோடு, ஏற்கனவே திருட்டு, கொள்ளை போன்ற வழக்குகளும் அவர் மீது இருந்துள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஷார்தா சாஹு தொடர்ந்து அறிவுரை கூறி தடுத்து வந்ததால், அவர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் சௌரப் இந்த கொலையைச் செய்துள்ளார்.
இதற்கிடையில் துக்ளகாபாத் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளியை மே 22 மற்றும் 23 ஆம் தேதி இரவில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது சரணடைய மறுத்த சௌரப், தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீசார் மீது நான்கு முறை சுட்டுள்ளார். இதில் ஒரு குண்டு சப்-இன்ஸ்பெக்டர் யஷ்பாலின் புல்லட் புரூப் ஜாக்கெட்டில் பட்டதால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
உடனே போலீசார் தற்காப்பிற்காக பதிலடி கொடுத்து சுட்டதில், ஒரு குண்டு சௌரப்பின் காலில் பாய்ந்தது. அதன்பின் அவரைப் பிடித்த போலீசார் சிகிச்சைக்காகமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கொலையின் போது அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் இந்த வழக்கை மேலும் விசாரித்து வருகின்றனர்.
