உலகளாவிய எரிசக்தி தடங்கல்களும், கச்சா எண்ணெய் தட்டுப்பாடும் இதே நிலையில் நீடித்தால், சில்லறை விற்பனையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயர்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் மனிதவள இயக்குனர் ராஜ் குமார் துபே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க நம்மிடம் மூன்று வழிகள் மட்டுமே உள்ளன. முதலாவதாக, பெட்ரோல், டீசல் விலையை நேரடியாக உயர்த்தி, அந்த சுமையை நுகர்வோர் மீது சுமத்துவது. இரண்டாவதாக, பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களே இந்த இழப்புகளை ஏற்றுக்கொண்டு மேலும் நஷ்டத்தைச் சந்திப்பது. மூன்றாவதாக, பற்றாக்குறை நிதியுதவி மூலம் அரசாங்கமே இந்த நட்டத்தை ஈடுகட்ட நிதி வழங்குவது ஆகும். தற்போதைய உலகளாவிய சூழலைக் கவனிக்கும்போது, இதே நிலை தொடர்ந்தால் அடுத்தகட்ட விலை உயர்வு என்பது நிச்சயம் நடக்கக்கூடும்.

அதே வேளையில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு தாராளமாக உள்ளது. எனவே, சமூக ஊடகங்களில் பரவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். பொதுமக்கள் பதற்றமடைந்து எரிபொருளைச் சேமிக்கத் தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.