ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அங்குள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், தாளவாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மதன் கார்த்தி (6) என்ற சிறுவன், ஓடையில் சீறிப்பாய்ந்து சென்ற மழை வெள்ளத்தை வேடிக்கை பார்ப்பதற்காக அப்பகுதிக்குச் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ஓடையில் மதன் கார்த்தி நிலைதடுமாறி விழுந்த நிலையில், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆக்ரோஷமாக வந்த வெள்ளநீர் அந்த சிறுவனை அடித்துச் சென்றுள்ளது.
சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், கிராம மக்களுடன் இணைந்து ஓடை முழுவதும் சிறுவன் மதன் கார்த்தியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மழைக்காலங்களில் குழந்தைகளை நீர்நிலைகள் மற்றும் ஓடைகள் அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பலரும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
