மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில், மூழ்கிக் கொண்டிருந்த 10 வயது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோகச் சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த கணேஷ் பாட்டீல் என்பவர், தன் குடும்பத்துடன் ஜபல்பூரில் உள்ள பத்புரா ஆசிரமத்திற்குப் புனித யாத்திரையாக வந்திருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

பூஜை முடிந்த பிறகு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் நர்மதை நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 10 வயதான லக்கி பாட்டீல் எதிர்பாராதவிதமாக வழுக்கி ஆழமான நீரில் விழுந்துள்ளான். தன் மகன் நீரில் மூழ்குவதைக் கண்ட தந்தை கணேஷ் பாட்டீல், உடனடியாக ஆற்றில் குதித்து மகனைக் காப்பாற்றப் போராடினார்.

ஆனால், பர்கி அணையின் 9 மதகுகள் திறக்கப்பட்டிருந்ததால் நர்மதா ஆற்றில் நீரோட்டம் மிகவும் வலுவாகவும், ஆபத்தான அளவிலும் இருந்தது. இதனால் மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தையும், சிறுவனுடன் சேர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் சார்கவான் காவல் துறையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் உள்ளூர் மூழ்காளர்களின் உதவியுடன் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், ஆற்றின் அதிக ஆழம் மற்றும் அதிவேக நீரோட்டம் காரணமாக தேடுதல் பணியில் பெரும் சவால்கள் நிலவுகின்றன.

விபத்து நடந்து 36 மணி நேரத்திற்கு மேலாகியும் இருவரைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காததால், படித்துறைக் கரையில் காத்திருக்கும் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஆற்றின் பல்வேறு பகுதிகளில் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.