ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பிறந்து 4 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்த பிறகும், மருத்துவக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மருத்துவர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அந்த உடலுக்குச் சிகிச்சை அளிப்பது போன்ற நாடகம் ஆடியதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொடூரச் செயல் குறித்த வீடியோ சமூக வலைத்தளமான ‘X’ தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதை அறியாத பெற்றோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், திடீரென சிகிச்சை அறைக்குள் நுழைந்தபோதுதான் இந்த மனிதாபிமானமற்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“>

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், நடிகர் விஜய் நடித்த ‘ரமணா’ அல்லது அக்ஷய் குமாரின் ‘கப்பார் ஈஸ் பேக்’ போன்ற திரைப்படக் காட்சிகளை இது நினைவூட்டுவதாகக் கூறி, பணத்திற்காக மருத்துவ உலகம் இவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டதா எனச் சாடி வருகின்றனர்.

இந்நிலையில் லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் இடத்தில் மனிதநேயம் மடிந்துவிடுகிறது என்றும், இது வெறும் மருத்துவ அலட்சியம் மட்டுமல்ல, எல்லை மீறிய அநாகரிகம் மற்றும் கொடூரம் என்றும் மக்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள மருத்துவக் கட்டமைப்பு மற்றும் அதன் மீதான நம்பகத்தன்மை குறித்துப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.