இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலின் போது அரங்கேறிய கொடூரமான பாலியல் வன்முறைகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இஸ்ரேலின் ‘சிவில் கமிஷன்’ அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திய விரிவான விசாரணையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய பெண்களைக் கடத்தி, தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

மேலும் நோவா இசை விழாவில் தப்பிப்பிழைத்த சாட்சிகளின் வாக்குமூலங்களின்படி, உயிரோடு இருந்த பெண்கள் மட்டுமின்றி, கொல்லப்பட்ட பெண்களின் உடல்களையும் பயங்கரவாதிகள் விட்டுவைக்கவில்லை. உடல்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்ததோடு, கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாகக் கொலை செய்து, பின்னர் அந்த உடல்களைப் பொதுவெளியில் ஊர்வலமாகக் கொண்டு சென்று கொண்டாடியுள்ளனர்.

இந்தக் கொடூரங்களை நேரில் பார்த்தவர்கள் மற்றும் தப்பியவர்களின் வாக்குமூலங்கள், புகைப்படங்கள், மற்றும் வீடியோ பதிவுகள் உள்ளிட்ட சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்களை மட்டுமன்றி, சிறுவர்கள் மற்றும் முதியவர்களையும் ஒரு உத்தியாகப் பயன்படுத்தி இந்த பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் அலறல் சத்தங்களுக்கு மத்தியிலும் எவ்வித இரக்கமுமின்றி சிரித்துப் பேசிக்கொண்டே இந்த அரக்கத்தனமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிணைக் கைதிகளை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், இஸ்ரேல் நாடு முழுவதும் பேரழிவையும் பீதியையும் உருவாக்குவதே ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது என்பது இந்த விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.