மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையேயான இடைவெளியில் சிக்கிய இளைஞர் ஒருவர், உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

மே 4-ம் தேதி மாலை 5 மணியளவில் அந்தேரி ரயில் நிலையத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரிக்கும் தொழில் செய்து வந்த அந்த இளைஞர், ரயில் நிலையத்திற்குள் வந்துள்ளார். அவர் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்தாரா அல்லது தண்டவாளத்தைக் கடக்க முயன்று நடைமேடையில் ஏறும்போது ரயிலில் சிக்கினாரா என்பது குறித்து இருவேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விபத்தில் அந்த இளைஞரின் இடுப்புக்குக் கீழ் உள்ள உடல் பகுதி முற்றிலும் துண்டாகி ரயிலுக்கு அடியில் சிக்கியது. தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்த ஆர்.பி.எஃப் (RPF) காவலர்களும் பயணிகளும் போராடி அவரை மீட்டு கூப்பர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் எக்ஸ்  பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதில், அந்த இளைஞரின் உடலின் ஒரு பகுதி தண்டவாளத்திலும், மேல் பகுதி நடைமேடையிலும் சிக்கியிருக்கும் கோரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பயணிகள் அவரை மீட்க முயலும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, அன்று மதியம் 12 மணியளவில் பயந்தர் ரயில் நிலையத்திலும் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். மும்பை லோக்கல் ரயில்களில் இது போன்ற விபத்துக்கள் தொடர்கதையாகி வருவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளங்களைக் கடப்பதோ அல்லது ஓடும் ரயிலில் ஏறுவதோ உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. பயணிகள் பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.