பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில், அண்டை வீட்டு மரத்தில் எலுமிச்சை பழம் பறித்ததற்காக 12 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் அந்த கிராமமே ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாளந்தா மாவட்டம் அஸ்தவான் காவல் எல்லைக்குட்பட்ட சக்ரவான் கிராமத்தைச் சேர்ந்த சுபம் குமார் (12) என்ற சிறுவன், தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, பக்கத்து வீட்டில் இருந்த கோரக் மியா என்பவரின் வீட்டு மரத்திலிருந்து ஒரு எலுமிச்சை பழத்தைப் பறித்துள்ளான்.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர், அந்தச் சிறுவனை லத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் சிறுவனின் தலை பிளந்து ரத்தம் கொட்டியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்த செய்தி பரவியதும், ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ‘கொலைக்குப் பதில் கொலை’ என முழக்கமிட்டு குற்றவாளிகளின் வீடுகளைத் தாக்கினர். 3-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
தகவலறிந்து வந்த போலீஸார் மீது மக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். பதற்றத்தைத் தணிக்க பாட்னா மற்றும் நாளந்தா மாவட்டங்களைச் சேர்ந்த 60 காவல் நிலைய போலீஸார் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் குந்தன் குமார் மற்றும் எஸ்.பி. பாரத் சோனி ஆகியோர் முகாமிட்டுள்ளனர். “இந்தக் கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தடயவியல் குழுவினர் சான்றுகளைச் சேகரித்துள்ளனர். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும்” என எஸ்.பி. உறுதியளித்துள்ளார்.
தற்போது கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். மத நல்லிணக்கம் பாதிக்கப்படாமல் இருக்க உளவுத்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
