இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்த எம்.எஸ் தோனிக்கு 42 வயது ஆகும் நிலையில் நடப்பு சீசனில் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தோனி பிரபல youtube சேனல் ஒன்று அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடுவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு வயதை பார்த்து இங்கு யாரும் சலுகை தருவது கிடையாது. தொழில்முறை போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிது கிடையாது. நீங்கள் விளையாடும் போது உங்களுடன் விளையாடும் சக வீரர்கள் போன்று நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். நான் சர்வதேச போட்டியில் இருந்து விலகிய பிறகு என்னுடைய குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிட விரும்பினேன். அதே நேரத்தில் மனதளவில் சுறுசுறுப்பாக இருக்க விரும்புகிறேன். எனக்கு விவசாய பண்ணை, மோட்டார் சைக்கிள் மற்றும் பழமை வாய்ந்த கார்கள் போன்றவைகள் மிகவும் பிடிக்கும். இந்த விஷயங்கள் எனக்கு மன அழுத்தத்தை குறைக்கும். மேலும் அதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் எனக்கு பிடித்தமான வாகனங்களில் சிறிது நேரம் செல்வேன் என்று கூறியுள்ளார்.
