மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கட்டாய மதமாற்றத்திலும் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திடீரென இஸ்லாமிய மத நடைமுறைகளைப் பின்பற்றுவதைக் கண்டு சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
உண்மையை அறிய பெண் போலீசார் அந்த அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போல வேடமிட்டு ரகசியமாகச் செயல்பட்டு வந்தனர். அப்போது, அங்கிருந்த சிலஅதிகாரிகள் இந்து பெண் ஊழியர்களைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்ததும், நோன்பு இருக்கவும் இஸ்லாமிய உடைகளை அணியவும் கட்டாயப்படுத்தியதும் அம்பலமானது.
இது தொடர்பாக 8 பெண் ஊழியர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஆசிப் அன்சாரி, டெனிஷ் ஷேக் மற்றும் மனிதவள மேலாளர் நிடா கான் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2022-ஆம் ஆண்டு முதல் இந்த அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததும், இது குறித்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மறைத்து வந்ததும் விசாரணையில்தெரியவந்தது.
தற்போது கைதான 7 பேரையும் சிறையில் அடைத்துள்ள போலீசார், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் ஐடி நிறுவனம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
