அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் இருந்து டெல்லிக்கு கடந்த மார்ச் 5ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த நிலையில் விமானம் அட்லாண்டிக் கடற் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் இருந்த 12 கழிவறைகளில் 8 கழிவறைகள் பழுதாகியது. இதனால் விமானம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு தற்காலிகமாக திரும்பும் நிலைக்கு முடிவெடுத்தது.

இதனை அடுத்து 300 பயணிகளும் சிகாகோவிற்கு திரும்பினர். அங்கு விமான நிலையத்தில் அவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் மாற்றுப் பயணத் திட்டங்கள் போன்றவை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கியது. இச்சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்ததாவது, கழிவறைகளில் பாலித்தீன் பைகள், துணிகள் மற்றும் பிற பொருட்கள் பயன்படுத்தக் கூடாது.

விமானத்தில் உள்ள கழிவறை குழாய்களில் இது போன்ற பொருள்கள் தேங்கி கழிவறை செயலிழக்க காரணமாகியுள்ளது. எனவே பயணிகள் சரியான முறையில் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் கழிவறையில் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். இதுவே விமானத்தின் பாதுகாப்புக்கும், பயணிகளின் வசதிக்கும் முக்கியமானது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.