வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில், வங்கி ஏடிஎம் விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. குறிப்பாக, ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்களில் யுபிஐ மூலம் பணம் எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.

இதுவரை இலவசமாக இருந்த இந்த வசதிக்கு, இனி ஏடிஎம் கார்டுகளைப் போலவே மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது டெபிட் கார்டுகள் மூலம் ஒரு நாளில் எடுக்கக்கூடிய பணத்தின் வரம்பைக் குறைத்துள்ளது.

முன்பு ஒரு லட்சம் ரூபாய் வரை எடுக்க முடிந்த நிலையில், இனி கார்டு வகையைப் பொறுத்து 50,000 முதல் 75,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும். அதேபோல, ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்கள் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து வங்கிப் பிரதிநிதிகள் மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பந்தன் வங்கியும் தனது ஏடிஎம் பரிவர்த்தனை விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இனி பந்தன் வங்கி ஏடிஎம்களில் 5 முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும்.

மற்ற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது மெட்ரோ நகரங்களில் 3 முறையும், பிற நகரங்களில் 5 முறையும் மட்டுமே இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும். இந்த வரம்பிற்கு மேல் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் இருப்புச் சரிபார்ப்பு போன்ற இதர சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.