தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, திருமணமாகி ஆறே நாட்களான நிலையில் புதுமாப்பிள்ளை ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகனேரி ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் இமானுவேல் எடிசன் என்பவருக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் அச்சகத் தொழிலாளியான இவர், இல்லற வாழ்வில் நுழைந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். நேற்று மாலை திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற பயணிகள் இரயில் முன், அடைக்கலாபுரம் அருகே இமானுவேல் எடிசன் திடீரென பாய்ந்து உயிர் துறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீசார் மற்றும் இரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமான குறுகிய காலத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.