பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) தகுதிகாண் அதிகாரியாக பணியாற்றிய 29 வயது வாணி, தனக்கு நிம்மதி கிடைக்காத வேலையை ராஜினாமா செய்தது குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
“எல்லா ஹீரோக்களும் தொப்பி அணிவதில்லை… சிலர் நச்சு வேலைகளை விட்டு விலகுகிறார்கள்” என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில், வாணி தனது மூன்று ஆண்டு அரசு வங்கி பணியிலிருந்து விலகியுள்ளதைத் தைரியமாக வெளிப்படுத்துகிறார்.
2022 ஆம் ஆண்டு வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்று, மீரட்டில் ஸ்கேல்-I அதிகாரியாக நியமிக்கப்பட்ட வாணி, ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு பணி வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், பணியின் நிலைத்தன்மையும், நிதி சுதந்திரத்தையும் பெற்றபோதும், அது மனஅமைதியைபாதித்தது என தெரிவிக்கிறார். “இந்த வேலை என்னை நிதி ரீதியாக உயர்த்தியது. ஆனால் மனதளவில் எப்போதும் சோர்வும், நெருக்கடியும் மட்டுமே. இது நன்றியற்ற வேலை” என தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.
வீடியோவில் அவர் மேலும் கூறியதாவது,
“முந்தைய நான்கு ஆண்டுகளில் நான் எரிச்சலுடனும், மனச்சோர்வுடனும் வாழ்ந்தேன். ஒரு நேரத்தில், நான் யார் என்பதைத் தொலைத்துவிட்டேன். இப்போது, அந்த சூழ்நிலையிலிருந்து வெளியேறி உண்மையான நிம்மதி என்னவென்று உணர்கிறேன்” என்றார். வாணி தனது முடிவை பொதுப்பண்பாடாக ஊக்குவிக்கவில்லை என்றும், இது தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தின் முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளார். “உங்களுக்கு பிடிக்காத இடத்தை விட்டு வெளியேறியபிறகு, நீங்கள் அடையும் மன அமைதி, எந்த இழப்பையும் மீறிக் கொண்டுதான் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது 5.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 1.29 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது ஆதரவையும் விமர்சனத்தையும் பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர், “புதிய தொடக்கங்களுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டார். மற்றொருவர், “இப்போது அனைவரும் வேலையை ராஜினாமா செய்து, பயண வலைப்பதிவாளர்களாக மாறுகிறார்கள்” என விமர்சித்தார்.
மேலும் ஒருவர், “இந்த போட்டி நிறைந்த காலத்தில், உங்களது முடிவுக்கு தைரியம் தேவை. பாராட்டுகள்” என்றார். மேலும் சிலர், “நாங்கள் அரசு வேலைக்காக போராடுகிறோம், நீங்கள் ஒரு பணியைக் கைவிட்டுவிட்டீர்கள்; அதைப் பெறுபவர்கள் அரிதாகவே மதிக்கிறார்கள்” என கருத்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
