அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் கால்பந்து தொடரில், ஃபிலடெல்பியா யூனியன் மற்றும் இன்டர் மியாமி அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போராட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தாலும், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் களத்தில் அரங்கேறிய எதிர்பாராத மோதல் தான் தற்போது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நகர்ந்த இந்தப் போட்டியின் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடங்களில், களத்தில் இருந்த வீரர்களுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இன்டர் மியாமி அணியின் மிட்ஃபீல்டர் யானிக் பிரைட் மற்றும் ஃபிலடெல்பியா அணியின் 16 வயது இளம் நட்சத்திரம் Cavan Sullivan ஆகியோருக்கு இடையே மோதல் முற்றியது. நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த ஆட்ட நடுவர், உடனடியாகத் தலையிட்டு இருவருக்கும் சிகப்பு அட்டை  வழங்கி மைதானத்தை விட்டு வெளியேற்றினார். இந்த சம்பவம் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

வெறும் 16 வயதே ஆன கவன் கால்பந்து உலகிற்குப் புதியவர் அல்ல. கடந்த 2024ஆம் ஆண்டில் தனது 14 வயதிலேயே MLS லீக் வரலாற்றில் அறிமுகமாகி, மிக இளைய வயதில் களமிறங்கிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

ஆனால், இந்த முறை அவரது கால்பந்து திறமைக்காக அல்லாமல், மைதானத்தில் அரங்கேறிய இந்தக் கோபமான மோதலின் காரணமாக மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், இளம் வயதிலேயே புகழின் உச்சிக்குச் சென்ற இந்த வீரர் இனி எத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.