இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் காயம் காரணமாகக் களமிறங்கவில்லை. இதனால், அவருக்குப் பதிலாகப் பொறுப்பு கேப்டனாக  களமிறங்கிய சல்மான் அலி ஆகா போட்டிக்கு முன்னதாக டாஸ் போடும் போது அளித்த பேட்டிதான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர்கள் போட்டிக்கு முந்தைய மற்றும் பிந்தைய பேட்டிகளில் ஆங்கிலம் பேசும்போது ஏற்படும் உளறல்களும், நகைச்சுவையான தவறுகளும் இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாவது வழக்கம். இதற்கு முன் சல்மான் அகாவும் கூட தனது ஆங்கிலப் பேச்சுக்காகச் சமூக வலைத்தளங்களில் சிலமுறை ட்ரெல் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், இம்முறை யாரும் எதிர்பாராத வகையில் அவர் காட்டிய சரளமும், கான்பிடென்ட்டும் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. தொகுப்பாளர் மார்க் புட்சருடன் பேசிய சல்மான், அணியின் தேர்வு, திட்டமிடல் மற்றும் தொடரை எதிர்கொள்ளும் விதம் குறித்து எந்தவிதத் தடுமாற்றமும் இன்றி மிகத் தெளிவாகவும் துணிச்சலாகவும் ஆங்கிலத்தில் பேசினார்.

இந்த நேர்காணல் ஒளிபரப்பான சில நிமிடங்களிலேயே அதன் கிளிப்புகள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவின. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது வியப்பையும், நகைச்சுவையான கமெண்ட்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

“சல்மான் அலி ஆகா எந்த மொழியில் பேசுகிறார்? இது என்ன பாகிஸ்தானி ஆங்கிலமா? நாங்கள் பாபர் அசாமின் பாணி ஆங்கிலத்தை மிஸ் செய்கிறோம்” என்று ஒரு ரசிகர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவரோ, “அவர் ஆங்கிலத்தில் பேசுவது முன்பைவிட நன்றாகவே மேம்பட்டுள்ளது” என்று பாராட்டியுள்ளார். திடீர் கேப்டன் பொறுப்பையும், மீடியா வெளிச்சத்தையும் அவர் கையாண்ட விதம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.