மனிதநேயம் முற்றிலுமாய் செத்துப்போன ஒரு கோரச் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் நடந்துள்ளது. பெற்ற மகளைக் கண்மணிபோல காக்க வேண்டிய ஒரு தந்தையே, அவளுக்குச் செய்த செயல் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கி எடுத்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு தாயைப் பிரிந்து சென்ற தனது மூத்த மகளை, தந்தை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். அச்சுறுத்தல் மூலமாக அச்சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைய, தன் குற்றத்தை மூடிமறைக்கத் துடித்த அந்தத் தந்தையும், அவரது அத்தையும் இணைந்து சட்டவிரோதமாக மாத்திரைகளைக் கொடுத்து கட்டாயக் கருக்கலைப்பு செய்துள்ளனர்.

இந்த நயவஞ்சகம் இத்துடன் நிற்கவில்லை. இதன் பின்னரும் தொடர்ந்த கொடுமையால் அச்சிறுமி மீண்டும் கர்ப்பமடைந்தார். இந்த முறை விஷயத்தை எப்படி வெளியே வராமல் தடுப்பது என்று யோசித்த தந்தை, செவிலியர்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் இணைந்து ஒரு மாபெரும் கிரிமினல் சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

அதன்படி, சிறுமியின் உண்மையான வயதை மறைத்து, போலியான ஆவணங்களைத் தயாரித்து அவருக்குத் திருமணமாகிவிட்டதாகப் பொய்க்கதை ஒன்றை ஜோடித்தனர். பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்து அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறக்கச் செய்துள்ளனர். குழந்தை பிறந்தவுடனேயே, மருத்துவமனை ஊழியர்களின் உதவியோடு அந்தப் பச்சிளம் குழந்தையை வேறொரு நபருக்கு விற்றுப் பணமாக்கியுள்ளனர்.

இந்தக் கொடூரங்களை எல்லாம் தாங்க முடியாத சிறுமி, சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் தனது தாயைத் தொடர்புகொண்டு நடந்த அத்தனை கொடுமைகளையும் அழுதுகொண்டே விவரித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன தாய் உடனடியாக  காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், கொடூரச் செயலில் ஈடுபட்ட தந்தை, அத்தை, போலியான ஆவணங்களை உருவாக்கத் உடந்தையாக இருந்த செவிலியர்கள் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய நபர் உள்பட மொத்தம் 8 பேரை அதிரடியாகக் கைது செய்து போக்சோ மற்றும் பிற சட்டப் பிரிவுகளின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற தந்தையே அரக்கனாக மாறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.