2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் நிலையில், நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னரின் கருத்துக்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்துள்ள நறுக்கென்ற பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சான்ட்னர், 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியது போலவே, “அகமதாபாத் மைதானத்தில் திரளும் இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு” என்று சவால் விடுத்திருந்தார்.

மேலும் ஒரு பில்லியன் இந்தியர்களின் இதயங்களை உடைத்து கோப்பையை வெல்வதில் தங்களுக்குத் தயக்கமில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சான்ட்னரின் இந்த ‘மைண்ட் கேம்’ குறித்து சூர்யகுமார் யாதவிடம் கேட்கப்பட்டபோது, அவர் தனது பாணியில் மிகவும் கூலாகவும் நகைச்சுவையாகவும் பதிலளித்தார். “எல்லாரும் ஒரே வரியையே ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே, கொஞ்சம் புதிதாக ஏதாவது சொல்லலாமே?” என்று கிண்டலாகக் கேட்டார்.

இந்நிலையில் எதிரணிகள் பழைய வசனங்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய சூர்யா, இந்திய அணி மிகவும் உற்சாகத்துடனும் ஒரு சிறப்பான சூழலிலும் இறுதிப்போட்டியை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சூர்யகுமாரின் இந்த அதிரடியான மற்றும் சமயோசிதமான பதில் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.