அதிமுக கட்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று சமீபத்தில் மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இதற்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் அதற்கு அடுத்தபடி செங்கோட்டையன் டெல்லிக்கு சென்றார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருக்கும் நிலையில் அவருடைய டெல்லி பயணம் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது.

அதோடு செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே செங்கோட்டையன் டெல்லி சென்ற நிலையில் அவர் மீண்டும் இன்று டெல்லிக்கு செல்வதாக தகவல் வெளியானது. அதன்படி அவர் டெல்லிக்கு கிளம்பிய நிலையில் இன்று அவரை சந்தித்த செய்தியாளர்கள் மீண்டும் டெல்லிக்கு செல்கிறீர்களா என்று கேட்டனர். அதோடு என்ன காரணத்திற்காக மீண்டும் டெல்லிக்கு செல்கிறீர்கள் என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மௌனம் அனைத்தும் நன்மைக்கு தான் என்று கூறினார். மேலும் அவர் நாளை உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.