எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்’ தளத்தின் Grok AI மூலம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக இந்திய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஜனவரி 2-ம் தேதி எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
மேலும் ஆரம்பத்தில் எக்ஸ் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று அரசு தெரிவித்த நிலையில், தற்போது எக்ஸ் நிறுவனம் தனது தளத்தில் ஏற்பட்ட இந்தத் தவறை ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் இந்தியச் சட்டங்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் ஆபாசமான உள்ளடக்கங்கள் உருவாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள எக்ஸ் நிறுவனம், இதுவரை ஆபாசமான உள்ளடக்கங்களை உருவாக்கிய சுமார் 600-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக நீக்கியுள்ளது. அத்துடன், விதிகளுக்குப் புறம்பாக உருவாக்கப்பட்ட சுமார் 3,500-க்கும் அதிகமான ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை தனது தளத்திலிருந்து அகற்றியுள்ளது.
Grok AI கருவி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை அமல்படுத்தி வருவதாகவும், பயனர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எக்ஸ் நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
