இன்றைய பரபரப்பான உலகில் மனிதர்களுக்கு இடையே அன்பே குறைந்து வரும் நிலையில், வாயில்லா ஜீவன்களுக்காக லோகோ பைலட் ஒருவர் செய்த செயல் இணையவாசிகளின் கண்களைக் கசிய வைத்துள்ளது. தண்டவாளத்தில் நின்ற எருமைக்கூட்டத்தைக் காப்பாற்ற அவர் காட்டிய மனிதாபிமானம் இப்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

அதாவது வழக்கம் போல ரயில் தனது வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் எருமைகள் கூட்டம் ஒன்று நிற்பதை லோகோ பைலட் கவனித்தார். பொதுவாக இதுபோன்ற நேரங்களில் ஹார்ன் அடித்து விலங்குகளை விரட்ட முயல்வார்கள். இந்தப் பைலட்டும் ஹார்ன் அடித்துப் பார்த்தார். ஆனால், எருமைகளோ ‘நாங்கள் இங்கேயேதான் பிக்னிக் கொண்டாடுவோம்’ என்பது போல அங்கிருந்து நகரவே இல்லை.

எருமைகள் நகராததால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை உணர்ந்த லோகோ பைலட், சற்றும் யோசிக்காமல் உடனடியாக எமர்ஜென்சி பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். ரயில் நின்றதும், தனது இருக்கையை விட்டு கீழே இறங்கி வந்த அவர், எருமைகளை அதட்டாமல் மிகவும் நிதானமாகவும், அன்பாகவும் ஒவ்வொன்றாக தண்டவாளத்தை விட்டு அப்புறப்படுத்தினார். அனைத்து எருமைகளும் பாதுகாப்பான இடத்திற்குச் சென்ற பிறகே மீண்டும் ரயிலை இயக்கினார்.

இந்த நெகிழ்ச்சியான காட்சியை எக்ஸ் (X) தளத்தில் ‘@Dineshkjoshi007’ என்ற பயனர் பகிர, அது தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். மேலும் இன்னும் மனிதாபிமானம் சாகவில்லை இவர்தான் உண்மையான ஹீரோ  என நெட்டிசன்கள் லோகோ பைலட்டைப் பாராட்டி வருகின்றனர். விதிகளுக்கும் சட்டங்களுக்கும் அப்பால், உயிர்கள் மீது காட்டும் கருணை இந்த உலகை இன்னும் அழகாக்குகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.