விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்” என்ற கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “எம்.ஜி.ஆரை பொதுமக்கள் தெய்வமாக கருதுகிறார்கள். அவரைப் பற்றித் திருமாவளவன் பேசியது தவறு. இதுபோல வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக பேசிக் கொண்டிருக்கிறார். இதன் விளைவாக அவர் அரசியலில் காணாமல் போய்விடுவார்” என்று கடும் விமர்சனம் செய்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த திருமாவளவன், “எம்.ஜி.ஆர் மீதும், ஜெயலலிதா மீதும் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவர்களைப் பற்றி நான் பலமுறை பாராட்டி பேசியுள்ளேன். சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நினைவு நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசியல் எப்படி கலைஞர் மையப்படுத்தப்பட்ட அரசியலிலிருந்து கலைஞர் எதிர்ப்பு அரசியலாக மாறியது என்பதைக் குறித்து பேசினேன். அதில் எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை ஒரு சாதிக்குள் சுருக்க முடியாது. நானும் அப்படி செய்யவில்லை. ஆனால் என் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” எனவும் திருமாவளவன் கூறினார். இந்த விளக்கத்தின்போதும், எம்.ஜி.ஆர் குறித்து அவர் முன்வைத்த தொடக்கக் கருத்து தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது.