அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆக இருந்த செங்கோட்டையன் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது கட்சியின் வெற்றிக்காக களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அதிமுகவை அடிமை ஊழல் கட்சி என விஜய் விமர்சித்ததால் தற்போது விஜய் அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியும் கரூர் சம்பவத்தில் விஜயை தாக்கி பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது அந்த மக்களை நேரில் சென்று பார்க்காதவர் எனவும், 13 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒரு அமைச்சர் கூட நேரில் போகவில்லை எனவும் விமர்சித்திருந்தார். ஜெயலலிதா தங்கி இருந்த கோடநாடு எஸ்டேட்டில் இரண்டு கொலைகள் நடைபெற்றது.
அந்த சம்பவம் காலையில் தான் நடந்தது என எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில் அவர் எப்படி முதலமைச்சர் பதவிக்கு வந்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும். எனவே அவருக்கு விஜயை பற்றி பேச தகுதி இல்லை எனவும் எம்ஜிஆர், என்டிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் சினிமாவிலிருந்து வந்து தான் முதலமைச்சராக இருந்தவர்கள் எனவே நடிகர் விஜய் முதலமைச்சராக முடியாது என்று கூறுவது ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்காக வைக்கப்பட்ட பேனரில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. அதில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் மட்டுமே இருந்தது. மேலும் இப்படி இருக்கையில் அவர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் சென்று ஓட்டு கேட்பார் என்று விமர்சித்துள்ளார்.
